கத்திய பெருமானை தேடி பொதிகை மலைக்கு சென்றதுபோலவே கடுமையான பயணத்தினை நாம் செய்தோம். அந்த பயணத்திற்கு எப்போதும் யார் வேண்டுமென்றாலும் செல்ல இயலாது. ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அந்த பயணம்  மிகவும் மிரட்டலான மலைப்பயணம். அதுவும் இந்த பூவுலகம் பொன் விளையும் பூமியாக மாறுவதற்கு மழை வேண்டி நடந்த பயணமாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் இரண்டு ஆயிரம் அடிக்கு மேலே திருநெல்வேலி மாவட்டத்திலேயே மிக உயரமான அருவி யான தலையருவி அருகே நடைபெறும் அபூர்வ பூஜையில் கலந்துகொள்வதற்காக நடந்த பயணமாகும். மழைவேண்டி  பல பூஜைகள்  தாமிரபரணி நதியிலும், அதன் துணை நதிகளிலும் நடைபெற்றுவருவது வாடிக்கை.  ஆனால் அந்தப் பயணங்கள் எல்லாம் நதிக்கரையில் வாகனங்கள் செல்லும் வழியில் நடைபெறுவதாகும். ஆனால் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள், மிகவும் அடர்ந்த காட்டுக்குள் சென்று தலையருவி பூஜை செய்வது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. அந்தப் பயணம் எப்போதாவது ஒருமுறைதான் கிடைக்கும். அதற்கு சித்தர்கள் அருள்வேண்டும். 

Advertisment

நமது மேற்கு தொடர்ச்சி மலை வனத் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு பல பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஏன் பொதிகைமலைக்கே ஒருகாலத்தில் பாபநாசத்தில் இருந்துதான் சென்றார்கள். ஆனால் தற்போது அதையெல்லாம் தடை விதித்துவிட்டது வனத்துறை. அது போன்றுதான் மணிமுத்தாறு நதி தோன்றும் அடர்ந்த காட்டுக்குள் உள்ள தலையருவிக்கு செல்லும் பாதையும் தடை செய்யப்பட்ட பகுதி. ஆனால் அவ்விடத்திற்கு கரடு முரடான பாதை வழியாக கடினமாக பயணம் செய்து, மழை வேண்டும் என நடைபெறும் பூஜை பற்றித்தான் இந்த  பகுதியில் பேசப் போகிறோம்.  

Advertisment

வனம் என்றாலே அங்கே அகத்தியர் ஏகாந்த நிலையில் இருக்கிறார். பொதிகை மலையில் எங்கும் நிறைந்திருக்கும் அகத்திய பெருமான் அருள் இல்லாமல் இவ்விடத்துக்கு செல்ல இயலாது. அந்த அனுபவமே அற்புதமானது; அபூர்வமானது.

மழையை நிறுத்திவைப்பது  கிரகங்களின் வேலையாக இருந்தாலும், அதை வரவழைப் பது சித்தர்களின் கைவந்த கலை. சிவனின்றி அணுவும் அசையாது என்பர். சிவனை குருவாக கொண்டு 18 சித்தர்கள் உருவாகியுள்ளார்கள். அதில் தலையாய சித்தர் அகத்தியப் பெருமான். 

Advertisment

இருந்தாலும், ஒவ்வொரு சித்தர்களும் ஒவ்வொரு வகையில் மக்களுக்கு நல்லருள்  வழங்கிவருகிறார்கள். அதுபோன்ற சித்தர்தான் இடைக்காடர். மழை வேண்டி பூஜை என்றாலே இவரை நினைக்காமல் இருக்க இயலாது.

 சிவனருளால் இடைக்காடர் இப்படி சகல ஞானமும் பெற்றார்.  

அவரால் நினைத்ததை எல்லாம் செய்யமுடிந்தது. அவர் பொதிகை மலைக்கு வந்தார். அங்கு தியானத்தில் இருந்தார். அப்போது அவர் ஞானதிருஷ்டியில் கொடிய பஞ்சம் வரப் போவதை அறிந்தார். அந்த பஞ்சம் பனி ரெண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்பதைக் கணித்தார். அவர் மனம் மிகவும் வேதனை அடைந்தது. நதிகள் வற்றப் போகின்றன. ஊற்று தோண்டினால்கூட தண்ணீர் ஊறாது. தண்ணீர் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் புல்செடிகூட முளைக்காது. பஞ்சம் ஏற்பட்டு உயிர்கள் அழிந்துவிடும்.  

agathiyar1

இறைவன் கட்டளை இதை மாற்ற இயலாது. ஆனாலும், மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் கஷ்டம் வரும் நேரத்தில்தானே சேவை செய்யச் சொல்லி இறைவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.  அந்த சேவையை செய்யவேண்டும். அவர் தனது ஞானத்தினால் சில காரியங்களை செய்ய ஆரம்பித்தார். தான் வளர்க்கும் ஆடுகளுக்கு எருக்கு இலைகளை பறித்துப் போட்டார். ஆடுகள் எருக்கு இலையை சாப்பிட பழக்கினார்.  கேழ்வரகு தானியத்தை மண்ணுடன் சேர்த்து குழைத்து ஒரு குடிசை கட்டினார். ஊர்மக்கள் இவரது செய்கையை வித்தியாசமாகப் பார்த்தனர். 

இடைக்காடனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. எவனாவது விஷத் தன்மையுள்ள எருக்கு இலைகளை ஆடுகளுக்கு பறித்துப் போடுவானா? என்று அவரை  ஏளனம் செய்தனர்.

"அது ஒரு புறம் இருக்கட்டும் கேழ் வரகைக் குழைத்து  எவனாவது வீடு கட்டுவானா?' என்று பரிகாசம் செய்தனர். 

அதே வேளையில் சிலருக்கு சந்தேகமும்  ஏற்பட்டது. "இடைக்காடர் முக்காலமும் அறிந்தவர். ஏதோ நடக்கப்போகிறது. அதனால்தான் இவர் ஏதோ செய்கிறார்'. அவரிடம் நேரில்சென்று என்ன ஏதுவென்று விசாரிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். 

இடைக்காடர் அவர்களிடம் விளக்கினார். 

"மக்களே கொடிய பஞ்சம் வரப்போகிறது. பஞ்சகாலத்தில், பச்சிலைகளுக்கு எங்கே போவது? எனவே, எனது ஆடுகளுக்கு கடும் கோடையிலும் காயாமல் இருக்கும் எருக்கு இலைகளை சாப்பிட பழக்குகிறேன்' என்றார்.

சிலருக்கு புரிந்தது. ஆனால் பலருக்கு ஏளனமாக இருந்தது. இவரை கேலி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.  

"மக்கள் தன் பேச்சை நம்பவில்லை. நம்பாவிட்டாலும் பரவாயில்லை. ஏளனமும் செய்கிறார்களே. இவர்களையும் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், அவர்கள் விதி பயனால் வேறு மாதிரி கேலி செய்கிறார்களே' என தன்னைதத்தானே  நொந்துகொண்டார் இடைக்காடர்.

காலங்கள் கடந்தது! அவர் சொன்னது போலவே  வறட்சி துவங்கியது. கொஞ்ச காலத்தில் சீராகிவிடும் என நினைத்தார்கள் மக்கள். 

ஆனால் மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லை. பல வருடம் பஞ்சம் நீடித்தது. பயிர் பச்சைகள் அழிந்தன. பலர் பட்டினியால் மடிந்தனர். கால்நடைகள் உணவின்றி  தவித்தது. இடைக்காடர் வளர்த்த ஆடுகள் மட்டும் எருக்க இலையைச் சாப்பிட பழகியிருந்ததால் உயிர் பிழைத்துக்கொண்டன. அந்த இலையைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட அரிப்பு தாங்காமல் இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் ஆடுகள் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக்கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டுக் கொண்டார் இடைக்காடர். தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால் தான் குடியிருந்த இடத்தின் அருகிலிருந்த ஆற்றில் ஒரு ஆழமான பகுதியில் ஊற்று தோண்டி வைத்துக்கொண்டார். கிடைக்கிற தண்ணீ ரைச் சிக்கனமாக பயன்படுத்தினார்.

இந்த சமயத்தில் வானுலகில் இருந்து நவகிரகங்கள் பூலோகத்தில் தாங்கள் ஏற்படுத்திய வறட்சி நிலை எப்படி  இருக்கிறது? மக்கள் சிரமத்தினை கண்டுகளிப்போம். பாவம் செய்த மக்களுக்கு, சரியான தண்டனை வழங்கும்படி இறைவன் இட்ட கட்டளை நிறைவேறி விட்டதா என ஆய்வுசெய்தனர். எங்கும் வறட்சி. நீர் இன்றி வறண்டு பாலைவனம்போல காட்சியளித்தது. அவர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் ஓரிடத்தில் பசும் சோலையாக இருந்தது. அங்கிருந்த கால்நடைகளும் மகிழ்ச்சியாக இருந்தது. அவ்விடத்தினை உற்று நோக்கினர். இடைக்காடர் கேப்பைக்கூழ் காய்ச்சுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆடுகள் எவ்வித சிரமமுமின்றி அலைவதை கண்டு ஆச்சரியமானார்கள். ஆகா அவரது புத்தி கூர்மையால் நம்மை வென்று விட்டாரே, அந்த சித்தரை சந்திக்கவேண்டும் என அவ்விடத்துக்கு வந்தனர். இடைக்காடர் அவர்களை வரவேற்றார். அதே வேளையில் அவருக்கு நவகிரகங்களை எப்படியாவது மயக்கி, மக்களை காப்பாற்ற வேண்டும் என யுக்தி ஒன்றை கையாண்டார்.

"கிரக அதிபதிகளே. தாங்கள் அனைவரும் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும்' என்று அன்பாய் கேட்டுக்கொண்டார்.  

சித்தர் இடைக்காடர் பேச்சை தட்டினால்அவரை அவமதித்தது போலாகும்.  அடியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், இறைவனின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். எனவே கிரகங்கள் சம்மதித்தனர்.  இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள் உண்ட மயக்கத்தில் களைத்து படுத்துவிட்டனர். நள்ளிரவில் அயர்ந்து உறங்கிய அவர்களை, தன் சக்தியால் எழவிடாமல் செய்த இடைக்காடர் அவர்களை தூக்கி, மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்துவிட்டார். 

அவ்வளவுதான் மழை கொட்டோ கொட்டனெ கொட்ட ஆரம்பித்து விட்டது. 

காலையில் எழுந்த கிரகங்கள், அனல்காற்றுக்கு பதிலாக குளிர்காற்று வீசுவதையும், விடிய விடிய பெய்த பெரும் மழையில், ஆற்றில் தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என நம்பிய அவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இப்போதைக்கு இவரை எழுப்ப முடியாது என உணர்ந்துகொண்ட நவகிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டனர்.

 இதுபோலவே விதியை மதியால் வெல்லும் சித்தர்பெருமக்கள் வாழ்ந்த காடு இந்த அற்புத காடு.

விளைநிலங்களை மிகுதியாகக்கொண்ட ஜமீன் சிங்கம்பட்டி ஜமீன்தார். எனவே விவசாயத்துக்கு மிக முக்கியத்துவம்  கொடுப்பார்கள். விளைநிலம் செழிக்க வேண்டும் என்றால் மும்மாரி மழை பொழியவேண்டும். மக்கள் செழிப்பாக வாழ வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். ஆண்டாண்டு காலமாக இந்தப் பண்பாடு மாறாமல் உள்ளது. ஜமீன் ஆளுமை முடிந்தாலும் இந்தியாவில் பட்டங்கட்டி வாழ்ந்த கடைசி ஜமீன்தார் என்ற பெருமையை கொண்டவர் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா. 

அவர் காலத்தில்தான் நாங்கள் அதிசய மலை பயணத்தில் கலந்துகொண்டோம். 

தாமிரபரணி, மணிமுத்தாறு, கோதையாறு போன்ற மூன்று ஆறுகளையும் உள்ளடக்கியது சிங்கம்பட்டி ஜமீன்தாரின் எல்கை. ஒரு காலத்தில் எட்டு வீட்டு பிள்ளைமாருக்கும் சேரமன்னனுக்கும் நடந்த சண்டையில் பாலகனான சேரமன்னன் துரத்தப்பட்டான். பொதிகைமலையில் தப்பி  ஓடிவந்து மறைந்து வாழ்ந்த பாலகன் சேரமன்னனுக்கு அடைக்கலம் கொடுத்தார் சிங்கம்பட்டி ஜமீன்தார். அவனை நன்றாக வளர்த்தனர்.  வில்வித்தை உள்பட பல வித்தைகளை கற்று கொடுத்தனர். அவனை சிறந்த படை வீரனாக மாற்றுகிறார்கள். வளர்ந்து வாலிபனானவுடன் தான் இழந்த சாம்ராஜ்யத்தினை மீட்க படை திரட்டுகிறான் சேர மன்னன்.  சிங்கம்பட்டியார் தனது  மூத்த வாரிசை அவருடன் அனுப்பி வைக்கிறார்.  

agathiyar2

எட்டு வீட்டு பிள்ளைமார்களை தோற்கடித்து மன்னனை அரியணை ஏற்றுகிறார்கள். 

அவ்வேளையில் சிங்கம்பட்டி ஜமீன்தார் மகன் போரில் வீர மரணம் அடைகிறான். இதனால் சிங்கம்பட்டியாரிடம், "தங்கள் மகன் உயிரிழப்புக்கு கைமாறாக என்ன வேண்டும்' என சேர மன்னன் கேட்கிறான். ஜமீன்தாரோ "குச்சி ஒடிக்க பொதிகை மலையில் காடு வேண்டும்' என கேட்டார். மனமுவந்த சேரமன்னன்  பொதிகை மலை அடிவாரத்தில் மூன்று ஆறுகள் ஓடிவருகின்ற பகுதியில் செழிப்பான சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை தானமாக வழங்குகிறார். அந்த இடத்தில்தான் மாஞ்சோலை எஸ்டேட்டும், பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் உள்பட பல தீர்த்தங்களும் இருக்கின்றன. தலையருவியும் இவரது ஆளுமைக்கு உள்ளேதான் இருக்கிறது. சிருங்கேரி சுவாமிகளோ சிங்கம்பட்டி ஜமீன்தாரை தீர்த்தங்களின் அதிபதியான தாங்கள்  தீர்த்தபதி என அழைத்தார். எனவேதான் சிங்கம் பட்டி ஜமீன்தாரை தீர்த்தபதி ராஜா என அழைக்கிறார்கள். தற்போதும் சிங்கம்பட்டி ஜமீன்தாரை தீர்த்தபதி ராஜா என அழைப்பதையும், அம்பாசமுத்திரத்தில் தீர்த்தபதி பள்ளியும், மருத்துவமனையும் உள்ளன  என்பதை நாம் காணலாம். 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்துக்கு  விவசாயம், குடிதண்ணீர், தொழிற்சாலை ஆகிய மூன்றுக்கும் தாமிரபரணி நீரே ஆதாரம். தாமிபரணியில் நீர் வற்றிவிட்டால் இந்த பகுதியே பாலைவனமாகிவிடும்.  எனவே நதி வற்றும் நாள்களில் சொரிமுத்து அய்யனாருக்கு ஜமீன்தார் தலைமையில் மிகப்பெரிய வேள்வியே நடைபெறும். அதில் அரசு முக்கிய அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். 

1989- 90களில் தாமிரபரணியில் தண்ணீர் வற்றியது. பயிர்கள் வாடின. குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தூத்துக்குடி அனல் மின் நிலையம் உள்பட தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. சொரிமுத்து அய்யனார் கோவில்முன்பு  இதற்காக சிறப்பு வேள்வியை நடத்தினார் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா. 

அப்போதைய நெல்லை ஆட்சி தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சருமான வேலு இந்த வேள்வியில் கலந்துகொண்டார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுத்து  ஜமீன்தார் அழைத்து வந்தார். அதையும் விட கடுமையான பஞ்சம் ஏற்பட்டால் இடைக்காடரைபோலவே வித்தியாச மான பூஜை ஒன்றை சிங்கம்பட்டி ஜமீன் தாரும் தனது குடிமக்களோடு செய்வார்.

ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில், மணி முத்தாறு ஆற்றங்கரையில் நடுக்காட்டுக்குள் உயிரைப் பணயம் வைத்து மழைக்காக நடைபெறும் ஒரு வித்தியாசமான பூஜையில் குடியானவர்கள் பங்கேற்பார்கள். அந்த பூஜைக்காகச் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, பாப்பாங்குளம் மக்கள் மிகவும் சிரத்தையெடுத்துக்கொள்வார்கள். அந்தப் பயணம் மிகவும் சிறப்பான பயணம். அதே வேளையில் உயிரை பணயம் வைக்கும் கடுமையான பயணம். ஆனால் அகத்தியரை வேண்டி இந்தப் பயணம் செய்வதால் இதுவரை யாருக்கும் எந்த தீங்கும் வந்தது இல்லை.  இந்தப் பயணத்துக்கான செலவு தொகையை சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

 மணிமுத்தாறு காட்டு பகுதியில் ஓடிவரும் இடத்தில்  ஒரு நாள் இரவு, இரண்டு நாள் பகல் பயணம் செய்து இந்த பூஜையை நடத்துவார்கள். இந்தப் பயணம் எப்போதாவதுதான் நடைபெறும்.  

ஆபத்தான பயணம்தான். ஆனாலும் விவசாயிகள் நலன்கருதி இந்தப் பூஜைக்கு  ஜமீன்தார் சம்மதிப்பார். ஏனென்றால் பல நேரங்களில் இந்தப் பூஜைக்கு செல்லும்போது உயிர்பலி ஏற்பட்டுள்ளது. ஒரு  காலத்தில் அருவிக்கரைக்குப் பூஜை செய்ய மேளதாளத்துடன் சென்றுள்ளனர் விவசாயிகள். அப்போது அவர்களோடு சென்ற இரண்டு மேளவாத்திய கலைஞர்கள் அருவியில் தவறி விழுந்துவிட்டனர். அந்த சமயத்தில் ஜமீன்தார் மனம்  வாடியது. 

வாத்திய கலைஞர்கள் குடும்பத்திற்கு பல நிலங்களை ஜமீன்தார் எழுதிக் கொடுத்தார். அதன்பின் இதுபோன்ற பூஜையை குறைத்து விட்டார்கள். ஆனாலும் கடுமையான பஞ்சம் வந்தால், அந்த பஞ்சத்தினை இறைவன்தானே தீர்க்கவேண்டும். இறைவனிடம் எப்படி குரல் கொடுப்பார்கள். சித்தர் பெருமக்கள் மூலமாகத்தானே குரல் கொடுப்பார்கள். இடைக்காடர் கூறிச்சென்ற வழிமுறையைத்தானே கடைபிடிக்க வேண்டும். இடைக் காடர் விதியை மதியால் வென்றதுபோலவே இங்கு விவசாயிகள் ஒரு பூஜை செய்யப்போகிறார்கள் என்பதால்தான் நாமும் இந்த பயணத்துக்கு தாயராகி விட்டோம். 

    குறிப்பிட்ட நாளில்  சிங்கம்பட்டி அரண்மனை முன்பு  சுமார் 100 பேர்கள்  கூடினார். 

அரண்மனை தலைமை காவலர் கட்டபொம்மன் தலைமையில் அவர்கள் ஜமீன்தாரிடம் ஆசி பெற்றனர். அகத்தியப் பெருமானின் அருளாசி பெற்று  பயணத்தினை துவங்கி னோம்.

 மணிமுத்தாறு அணைக்கட்டு வழியாக எங்கள் பயணம் துவங்கியது. எங்கும் பசுமை. 

கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தண்ணீர் இருந்தது. ஆனாலும் இந்த தண்ணீர் குடிதண்ணீருக்கு தான். விவசாயம் பொய்த்து கிடக்கிறது. இந்த அணையே வித்தியாசமான அணைக்கட்டுதான்.  காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது விவசாய மக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட அணை இதுவாகும். அதுவும் மண் கரைமூலம் கட்டப்பட்ட சிறப்பான அணை. இருபுறமும் அடர்ந்த காடுகள் வழியாக எங்கள் வாகனங்கள் செல்கிறது. வனத்துறை செக்போஸ்டில் வாகனத்தினை நிறுத்தி பதிவு செய்துவிட்டு  கிளம்புகிறோம். 

 அழகாய் இருக்கும் அந்த அருவியை தூரத்தில் இருந்து பார்த்தபடியே எங்கள் வாகனம்  கடந்தது.  பாலத்தில் மாஞ்சோலை எஸ்டேட் செல்லும் பாதை வழியாக செல்கிறோம். சிறிது தூரத்தில் மணிமுத்தாறு தலையணைக்கு செல்லும்பாதை வருகிறது.  இத்துடன் எங்கள் வாகனம் நிறுத்தப் பட்டு விட்டது. இனி நடைபயணம்தான். 

தலையணைக்குச் செல்லும் பாதை வனத்துறையால் சுவர் கட்டி அடைக்கப்பட்டி ருந்தது. 

 இங்குவருபவர்கள் காட்டை நேசிக்கா மல் பிளாஸ்டிக் பொருள் உள்பட பல பொருள்களை கொண்டுசென்று காட்டை மாசு படுத்தியுள்ளனர். எனவே இங்கே வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர் வனத்துறையினர். வாகனங்களில் கொண்டு வரப்பட்ட பூஜைக்கு தேவையான பொருள்கள் இறக்கப்பட்டது.

வந்தவர்களிடம் ஒவ்வொரு பொருளாக தலைச்சுமையாக ஏற்றப்பட்டது. தங்களால் தூக்ககூடிய பொருள்களை ஒவ்வொருவராகத் தூக்கிக்கொண்டனர். அரிசி உள்பட மூட்டைகளை சுமக்க சம்பளத்துக்கு ஆட்களை நியம னம் செய்திருந்தார்கள். அவர்கள் மூட்டைகளை தலைச்சுமையாக தூக்கிக்கொண்டு  காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தனர்.

வனத்துறை தடுப்புச்சுவர் தாண்டி நடக்க ஆரம்பித்தனர். நாங்களும் அவர்கள் பின்னால் நடக்க ஆரம்பித்தோம். எங்களால் சுமை பெரிய அளவில் சுமக்க இயலாது. ஆனாலும் எங்களால் இயன்ற பொருள்களை எடுத்துக்கொண்டோம். மணிமுத்தாறு தலையணைப் பகுதியை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அடைந்தோம்.

(மலைப்பயணம் தொடரும்)